அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ரத்து!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது ஏற்கனவே இருந்த 1955 குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் கைகொடுக்கவில்லை. பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தது. இறுதியில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அப்படி தான் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2019ம் ஆண்டு திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், இதுவரை 5500 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.