அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கில் இருந்து நீதிபதி விலகல்!

மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனுவை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கிலிருந்து விலகியுள்ளார்.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் திண்டுக்கல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் ஏற்கனவே தள்ளுபடியானது.

இந்நிலையில், அங்கித் திவாரி உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதில், ‘கைது செய்யப்பட்டு 99 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நீண்ட நாள் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவேன்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவடிக்குமார் வாதிடுகையில், அங்கித் திவாரி உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இது சட்டவிரோதம். எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்க கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கை நீர்த்துப்போக செய்துவிடுவார் என்றார்.

இந்நிலையில், அங்கித் திவாரி வழக்கை தான் விசாரிக்க விரும்பவில்லை என்பதால் இந்த வழக்கிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும், வேறு நீதிபதி முன்பு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு நீதிபதி தெரிவித்தார்.