மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே, கடந்த 10-ந்தேதி மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோர் சென்னை வந்தபோது, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து, பா.ஜனதாவுடனான கூட்டணியை உறுதி செய்தார். தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் வழங்கினார்.
இந்தநிலையில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவதற்காக நேற்று நள்ளிரவு மீண்டும் சென்னை வந்த மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் வந்தனர். தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்தும், சின்னம் குறித்தும் மத்திய மந்திரிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் எடுத்து கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், கூறுகையில்; “பாஜகவுடனான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை மிக சுமுகமாக முடிந்தது. பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.” என்றார்.