2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்: சரத்குமார்

தனது கட்சியை அப்படியே பாஜகவுடன் இணைத்த சரத்குமார் பதவிக்காக பாஜகவுக்கு வரவில்லை என்ற அவர், 2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த சரத்குமார் நேற்றைய தினம் தனது கட்சியை அப்படியே பாஜகவுடன் இணைத்தார். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். பாஜகவில் உங்களுக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்விக்குப் பதிலளித்த சரத்குமார், “நான் பொறுப்பிற்காக பாஜகவுக்கு வரவில்லை.. பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பாஜகவுக்கு வந்துள்ளேன். பாஜக தமிழக முதல்வர் வேட்பாளராக என்னை அறிவிக்க வேண்டும் எனச் சிலர் சொல்வதாகக் கூறுகிறார்கள். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். நல்ல போய் கொண்டு இருந்தால் ஏன் நல்ல போய்க்கொண்டு இருக்கிறது என்று நினைத்து இப்படிச் சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நான் எந்த விதத்திலும் திசை திரும்பிப் போக மாட்டேன். ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதில் நான் உறுதியாகப் பயணிப்பேன் என்பது திமுகவுக்கும் நன்றாகவே தெரியும். நான் எனது கட்சியை பாஜகவில் இணைத்தது குறித்து ஏகப்பட்ட ட்வீட்களை போட்டுள்ளனர். கருணாநிதி இறப்பிற்குக் கூட அந்தளவுக்கு ட்வீட்களை அவர்கள் போட்டதாகத் தெரியவில்லை.

சின்ன சின்ன விஷயங்களையும் ட்வீட்டாக போட்டு இருக்கிறார். சால்வை போட்டாரா, கட்டிப் பிடித்தாரா என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். இதை எல்லாம் பார்க்க நன்றாக இருக்கு.. நல்ல என்டர்டெயினிங் ஆக இருக்கு.. ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாரத பிரதமராக மோடி 3ஆவது முறை வரும் போது தான் நாடு செழிக்கும். அதேபோல தமிழகத்திலும் 2026இல் இரு திராவிட கட்சிகள் இல்லாமல் பாஜக ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

பாஜகவில் இணைந்த சமயத்தில் சரத்குமார் இரவு 2 மணிக்கு இந்த யோசனை வந்ததாகவும் அது குறித்து தனது மனைவியை எழுப்பி அப்போதே கருத்துக் கேட்டுவிட்டே முடிவு எடுத்ததாகக் கூறியிருந்தார். அது பெரும் விமர்சனங்களைக் கிளப்பி இருந்தது. அது குறித்துப் பதிலளித்த அவர், “யாராவது ஆக்கப்பூர்வமாக விமர்சித்தால் அதற்கு நாம் பதில் சொல்லலாம். மனைவியிடம் கருத்துக் கேட்பதை இல்லாமல் விமர்சித்தால் என்ன சொல்வது. மனைவியிடம் கேட்காமல் யாரிடம் கேட்பார்கள். நான் சொன்ன இந்த ஒரு கருத்தை மட்டும் வைத்து விமர்சித்து வருகிறார்கள், நான் தரம் தாழ்ந்து யாரையும் விமர்சித்ததில்லை மறைந்திருந்து தாக்கி பேச வேண்டாம். நேரடியாக வந்து விமர்சனம் செய்யுங்கள். நான் 22 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 16 ஆண்டுகள் சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வருகிறேன். 1996இல் எப்படி எந்தவொரு சுயநலமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுகவுடன் இணைந்து பணியாற்றினேனோ அதேபோலத் தான் இப்போது பாஜகவில் சமகவை இணைத்துள்ளேன். நான் எடுத்த முடிவில் தெளிவாக இருக்கிறேன். இனி பாஜக தலைமை சொல்வதைக் கேட்டு கட்சி பணிகளைச் செய்வேன். ஒரே ஒரு சமக நிர்வாகி மட்டும் இது குறித்து அவசரப்பட்டு வார்த்தையைவிட்டு விட்டார். பின்னர் அவரே மன்னிப்பு கேட்டு விளக்கமும் சொல்லிவிட்டாரே” என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.