ஹரியாணா பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நயாப் சைனி வெற்றி!

ஹரியாணா மாநில சட்டபேரவையில் இன்று நடந்த சிறப்பு கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்வர் நயாப் சைனி வெற்றி பெற்றுள்ளார்.

ஹரியாணா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது அமைச்சரவையுடன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ராஜினாமா செய்தார். தொடர்ந்து மாநிலத்தின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் மாநிலத்தின் புதிய முதல்வர் நயாப் சிங் சைனி பதவி ஏற்றுக்கொண்டார். தனக்கு 48 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அளித்தார்.

இந்த நிலையில், நியாப் சைனி ஹரியாணா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்தார். இதற்காக காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. ஹரியாணாவில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. இதில் பாஜக வசம் 41 இடங்கள் உள்ளன. சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேரில் ஆறு பேரின் ஆதரவும், ஹரியாணா லோகித் கட்சி எம்எல்ஏ கோபால் கண்டாவின் ஆதரவும் பாஜகவுக்கு இருந்தது. ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் இருக்கின்றன. காங்கிரஸ் வசம் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

முன்னதாக, ஜேஜேபி கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா தனது கட்சி எம்எல்ஏக்கள் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டிருந்தார். எனினும், நான்கு ஜேஜேபி கட்சி எம்எல்ஏக்கள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் வாக்கெடுப்புக்கு முன்பாக நான்கு பேரும் ஒரு சுயேட்சை எம்எல்ஏவும் வெளிநடப்புச் செய்தனர். இறுதியாக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரியாணாவின் புதிய முதல்வர் நயாப் சிங் சைனி வெற்றி பெற்றார்.