பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு ஏதுவாக ஒரு மாத காலம் நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்திருந்தார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து புதிய உயர்க்கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கடந்த 2006-11 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ஆம் ஆண்டில் செப்டம்பரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2006 ஏப்ரல் 13 முதல் 2010 மே 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக கூறப்பட்டது. இது வருமானத்தை விட 65.99 சதவிகிதம் அதிகம் ஆகும். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்ப்பு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் பொன்முடி உள்ளிட்டோர் மீதான சிறை தண்டனை நிறுத்தி வைத்துள்ளதுடன், ஜாமீனும் வழங்கி இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி அன்று பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.
திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பழைய அறிவிப்பை ரத்து செய்து சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பொன்முடி தனது எம்.எல்.ஏ பதவியை தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நாளை காலையில் பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூடுதலாக கவனித்து வரும் உயர்க்கல்வித்துறை, முன்பு இருந்ததை போல் மீண்டும் பொன்முடிக்கு வழங்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.