கோவையில் பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லா சிலைகளையும் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் தலைவர்களுக்குச் சிலை வைப்பது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் சிலை வைக்கப்படும். அவர்கள் யார், இந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் அவர்கள் ஆற்றிய சேவை என்ன என்பதை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள இதுபோன்ற சிலைகள் உதவும் என்பதாலேயே பொது இடங்களில் சிலைகள் வைக்கப்படுகிறது. அதேநேரம் சில நேரம் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும் கூட சிலைகளை வைத்துவிடுகிறார்கள். இது பொதுமக்களுக்குப் பிரச்சினையாக மாறிவிடுகிறது. அப்படி கோவையில் பொது இடத்தில் வைக்கப்பட்ட சிலைக்கு எதிராக ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இதில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக் கோரி திமுகவை சேர்ந்த வி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் வழகு தொடர்ந்திருந்தார். பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் வகையில் அதிமுகவை சேர்ந்த வி.யு.மருதாச்சலம் என்பவர் சிலையை அமைத்து இருப்பதாக மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மருதாசலம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்தரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் பேருந்து நிலையத்தின் இடத்தில் சிலை அமைக்கப்படவில்லை என்றும், வண்டி பாதை புறம்போக்கு இடத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும், ஜெயலலிதா மட்டுமல்லாமல், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிலைகளும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசு தரப்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிலைகளை அகற்றும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே வண்டி புறம்போக்கு இடத்தில், அமைக்கப்பட்டுள்ள சிலைகளில் குறிப்பிட்டவற்றை மட்டும் அகற்றாமல், அனைத்து சிலைகளையும் அகற்றவேண்டுமென, அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.