அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்!

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் தனக்கு ஒரு தொகுதி ஒதுக்குமாறும் அவர் கேட்டு வருகிறார். மேலும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் முதலில் ஆரணி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு அவர் என்ன நினைத்தாரோ ஏது நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென தனது தொகுதியை வேலூருக்கு மாற்றிக் கொண்டார். எனவே வேலூர் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், முனுசாமி உள்ளிட்டோருடன் மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தனக்கு ஒரு மக்களவை தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு அதிமுகவிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் அதிமுக கூட்டணிக்கு தான் எல்லா தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வதாகவும் மன்சூர் அலிகான் உறுதியளித்துள்ளார்.

நடிகரும் தமிழ் மண் ஆர்வலருமான மன்சூர் அலிகான் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 1999ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்டார். கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திருச்சியில் லட்சிய திமுக சார்பில் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக இருந்த மன்சூர் அலிகான், அந்த கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவர் அக்கட்சியிலிருந்து விலகி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார். அந்த கட்சி சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி எம்பி தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது வேலூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறியுள்ளார். இதற்காக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.