தேர்தல் பத்திரங்கள் தொடர்பாகப் பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இதை அமைச்சர் பிடிஆர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கில் அந்த திட்டமே செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை எஸ்பிஐ வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. முதலில் இதற்கு எஸ்பிஐ காலஅவசாகம் கேட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது. இந்தச் சூழலில் எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் இதைக் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அமைச்சர் பிடிஆர் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அமைச்சர் பிடிஆர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
கடந்த மார்ச் 5ஆம் தேதி நான் கூறியது போலவே, எஸ்பிஐ ஒரே நாளில் இந்த தகவலை தர முடியும். அப்படி அவர்களால் வழங்க முடியாவிட்டால், எஸ்பிஐ உலகில் எந்த பகுதியிலும் வங்கியாகச் செயல்படத் தகுதியற்றது. இப்போது எஸ்பிஐ தகவல்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில், கடந்த மார்ச் 4ம் தேதி எஸ்பிஐ தாக்கல் செய்த தகவல்கள் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.. எனவே, தவறான தகவல்களை அளித்ததற்காகவும் தவறான வாதங்களை முன்வைத்ததற்காகவும் எஸ்பிஐ நிர்வாகம் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் மீது சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்குமா. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்பு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது, எஸ்பிஐ வங்கி தரப்பில் அதற்குக் கால அவகாசம் கேட்கப்பட்டு இருந்தது. தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களைத் தர ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி கடந்த மார்ச் 4ஆம் தேதி விண்ணப்பித்து இருந்தன. அதை அமைச்சர் பிடிஆர் கடுமையாகச் சாடியிருந்தார். அதில் அவர், “ஊர்ப் பெயர் தெரியாத நாட்டில் உள்ள மிகச்சிறிய வங்கி கூட இதுபோன்ற அடிப்படைத் தகவல்களை (வாங்கியது யார் மற்றும் பெற்றது யார்) என்பது குறித்த தகவல்களை சில வாரங்களில் வழங்க முடியாது என்று கூறினால், அடிப்படை பதிவுகளைக் கூட முறையாக வைக்கத் தவறியதற்காக அதன் வங்கி உரிமம் ரத்து செய்யப்படும்! இது உலகின் 5வது பெரிய பொருளாதாரத்தில் மிகப்பெரிய வங்கி என்பதை நினைவில் கொள்ளுங்கள். எஸ்பிஐ தரவுகளைக் கொடுத்தால் இந்த தகவல்களை ஒரே வாரத்தில் தயார் செய்து கொடுக்க எந்தவொரு வங்கியும் தயாராக இருக்கும். நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐக்கு இது வெட்கக்கேடானது. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. நாட்டின் மிகப்பெரிய வங்கி இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது நல்லதல்ல” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.