கோவையில் அறிவிக்கப்பட்ட 4 தொழிற்பேட்டைகளையும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவை டேக் செய்து, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று கோவையில் அறிவிக்கப்பட்ட 4 தொழிற்பேட்டைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகரமான கோவை, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மாவட்டம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் பெரும் பங்களித்து வருகிறது. துணை மின் நிலையங்கள், சாலைகள் போன்ற பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளும் இன்னமும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று தொழில்முனைவோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால் நான்கு தொழிற்பேட்டைகளிலும் தொழில் தொடங்க அதிகமானோர் முன்வரவில்லை.
“கோவை மாவட்ட சிறுதொழில் சங்கத்தின் (கொடிசியா) இரண்டு தொழிற் பூங்காக்கள், கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் (கோசிமா) தொழிற்பேட்டை ஆகியவற்றில் மூன்று மாதங்களில் பொதுவான உள் கட்டமைப்பு வசதிகள் செய்து முடிக்கப்படும்” என்று, கோவை மாவட்ட தொழில் மையம் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வாரப்பட்டியல் அறிவிக்கப்பட்ட ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்காவிலும் பணிகள் தாமதமாகி வருகின்றன. இங்கு தொழில் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்தவர்களுக்கும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளிலும் துணை மின் நிலையம் உள்ளிட்ட தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை விரைவாக முடித்து அதிகமானோர் தொழில் தொடங்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதில் செய்யப்படும் தேவையற்ற தாமதம் கோவையின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இதில் கவனம் செலுத்தி கோவையில் அறிவிக்கப்பட்ட நான்கு தொழிற்பேட்டைகளையும் விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.