தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2017ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அறிவித்தது. அதன்படி, நம் நாட்டை சேர்ந்த தனிநபர் அல்லது நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி தேர்தல் பத்திரங்கள் பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன. இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த பத்திரங்களை வெளியிடும், எஸ்.பி.ஐ அது தொடர்பான தகவல்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும். அந்த விபரங்களை, மார்ச் 13 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எஸ்பிஐ 4 மாதங்கள் அவகாசம் கேட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அவகாசம் அளிக்க மறுத்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்கள், அவற்றை ரொக்கமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களை கடந்த 12ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ அளித்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றியது. 2019 ஏப்ரல் முதல் 2024 வரையிலான தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ வழங்கியது. தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வழங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.