இந்திய தேர்தல் ஆணையத்தின் காலியாக இருக்கும் 2 தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான குழு இன்று 2 பேரையும் தேர்வு செய்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் ஆணையர்களாக அருண் கோயல் மற்றும் அனுப் சந்திர பாண்டே செயல்பட்டு வந்தனர். இதில் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஓய்வு பெற்றார். இதன் தொடர்ச்சியாக அருண் கோயல் திடீரென்று கடந்த 9 ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 முக்கிய பொறுப்புகளில் 2 காலியிடங்கள் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டப்படி லோக்சபா தேர்தல் நடக்குமா? இல்லை தாமதமாகுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 2 தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமயைில் இன்று உயர்கட்ட குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் மேக்வால் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஞானேஷ் குமார் மற்றும் சுக்வீர் சிங் சந்து ஆகியோர் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது சுக்வீர் சிங் சந்து பஞ்சாப்பை சேர்ந்தவர். இவர் அடிப்படையில் டாக்டர் ஆவார். இவர் பஞ்சாப் அமிர்தரசரசில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். அதன்பிறகு சட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தார். 1988 ம் ஆண்டை பேட்ஜ்ஜை சேர்ந்தவர். உத்தரகாண்ட்டில் தலைமை செயலாளராக பணியாற்றினார். உத்தரகாண்ட்டின் தற்போதைய முதல்வர் புஷ்கர் சிங் தாமி தான் இவரை தலைமை செயலாளரக கடந்த 2021ல் நியமனம் செய்தார். அதன்பிறகு பணி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சுக்வீர் சிங் சந்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவராக இருந்தார். மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையில் உயர்கல்வித்துறையின் கூடுதல் செயலாளராக பொறுப்பு வகித்தார். மேலும் இவர் பஞ்சாப் லுதியானா மாநகராட்சி கமிஷனராக பொறுப்பு வகித்தபோது ஜனாதிபதி பதக்கத்தை வென்றார். அதேபோல் ஞானேஷ் குமார் 1988 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தார். இவர் கேரளாவை கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் கேரளாவில் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். அதன்பிறகு மத்திய அரசு பணிக்கு சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டுறவுத்துறையில் செயலாளராக பணியாற்றினார். மேலும் நாடாளுமன்ற விவகாரத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். இவர் கடந்த ஜனவரி 31ம் தேதி பணி ஓய்வு பெற்ற நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.