தேர்தல் பத்திர எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

தேர்தல் பத்திர விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் பிரத்யேக எண்களை வெளியிடாதது ஏன் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாண்ட் எண்களை வெளியிடுமாறு எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. மேலும், இன்றைய விசாரணையின்போது எஸ்பிஐ வங்கி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகததற்கும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. அதில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி, கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்தது. கடந்த 2019 முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையில் 5 பேர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ வங்கி முழுமையாக வெளியிடாதது ஏன்? பத்திரங்களின் பிரத்யேக எண்ணை ஏன் குறிப்பிடப்படவில்லை என்று வினவினர். தேர்தல் பத்திரத்தின் எண்கள் தான் அதனை வாங்குபவர்களையும், நன்கொடையைப் பெற்றவர்களையும் இணைக்கக் கூடியது. அதை அளித்தால்தான் விவரங்கள் முழுமை பெறும். எனவே அதனை வங்கி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.