தர்பூசணி பழங்களில் சிலர் ஊசி மூலம் சிவப்பு நிறத்தை ஏற்றுகிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரத்தம் -எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம், திருநெல்வேலி மாவட்டம் கண்டியப்பேரி அரசு புறநகர் மருத்துவமனை கட்டிடம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு – பச்சிளம் குழந்தை பராமரிப்பு கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அரசு மருத்துவமனை கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். கோடைகால வெப்பம், வெப்ப அலை பாதிப்புகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் சுகாதாரத் துறையில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து நிரப்பப்படுகின்றன. கடந்த மாதம் 1,021 மருத்துவர்கள், 987 தற்காலிக செவிலியர்கள், 332 ஆய்வக நுட்புநர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 2015-ல் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் அவ்வப்போது காலி இடங்களுக்கு ஏற்ப காலமுறை ஊதியத்தில் இருந்து, நிரந்தரம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் 483 செவிலியர் பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன.
புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த 9,000 கடைகள் மூடப்பட்டுள்ளன. கோடைகாலம் தொடங்கிவிட்டதால், மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சுற்றுலா தளங்களில் போலி குளிர்பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சீசனுக்கு ஏற்றது போல் மாம்பழம், வாழைப்பழங்களில் கல் வைத்து பழுக்க வைப்பதையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தர்பூசணி பழம் சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் ஊசி மூலம் நிறத்தை ஏற்றுகிறார்கள். அதனை சாப்பிட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு நானே ஒருமுறை பாதிக்கப்பட்டிருக்கிறேன். இது குறித்து அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். எங்காவது கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.