“பிரதமர் மோடி, ஏன் இங்கேயே அடிக்கடி வருகிறார்? தமிழ்நாட்டிலேயே பாய் போட்டு படுத்தாலும்கூட, பாஜவால் டெபாசிட் கூட வாங்க முடியாது” என்று சிபிஎம் பாலகிருஷ்ணன் விமர்சித்திருக்கிறர்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு “கடமை கண்ணியம் கட்டுப்பாடு, கண்டது முதல்வரின் தமிழ்நாடு” என்கிற தலைப்பில் கொளத்தூர் அகரம் சந்திப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக முதன்மைசெயலாளர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பக்கமே வராத மோடி, இப்போது அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார்.. அவர் இங்கே, பாய் போட்டு படுத்தாலும் பாஜவால் டெபாசிட் கூட வாங்க முடியாது. தமிழகத்தில் திமுக கூட்டணி கம்பீரமாக உள்ளது. அதிமுக மற்றும் பாஜ கூட்டணி கோயிலில் உடைக்கும் சிதறு தேங்காய் போல் உள்ளது. பாஜக அதிமுக கூட்டணியில் தரகு வேலை நடந்து கொண்டிருக்கிறது.
போதைப்பொருளை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் சட்டமன்றத்தில் குட்கா ஊழல் பிரச்னை வந்தபோது யார் ஆட்சி நடந்து வந்தது? அதன் மீது சிபிஐ விசாரணை நடந்து, இப்போது வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் விஜயபாஸ்கர் தான், முதல் நபராக இருக்கிறார்.. போதைப்பொருள் கிடைக்க அடிப்படை காரணம் மோடி அரசுதான் என்று அண்ணாமலைக்கு தெரியுமா?
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களை குடியுரிமை அற்றவர்களாக மாற்றும் முயற்சி தான் குடியுரிமை திருத்த சட்டம் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமரே ராமர் கோயில் பிரதிஷ்டையில் ஈடுபட்டால், இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று எவ்வாறு எடுத்துக்கொள்வது?. இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
இதற்கு பிறகு துரை வைகோ பேசும்போது, “தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க ஒன்றிய அரசு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. ஜாபர் சாதிக் விவகாரத்தில் அதிமுக, பாஜக பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதப்பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார். இன்றைய நாட்டின் சூழல் மதவாத சக்திகள் தமிழகத்தில் வளரும் சூழ்நிலை வந்துள்ளது. இதை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் மூலம் சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படபோகிறது. பன்முக தன்மை கொண்ட இந்தியாவை காக்க வேண்டியது நம்முடைய ஒவ்வொருரின் கடமை” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ஒரு அரசாங்கம் மதச்சார்பற்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். பிரதமர் பூச்சாண்டி வேலை காட்டிக்கொண்டிருக்கிறார். அதிமுக, பாஜ கூட்டணியை போல இல்லாமல் தமிழகத்தில் திமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருந்து வருகிறது. ஒரே தராசில் ஒரு பக்கத்தில் பாஜ கூட்டணி கட்சிகளும், மற்றொரு பக்கத்தில் திமுகவுடனான இந்தியா கூட்டணி கட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இதில் திமுக கூட்டணி கட்சியான இந்தியா கூட்டணி கட்சி வெற்றி பெறும். ஏனெனில் நெடுங்காலமாக திமுக உடனான கூட்டணி மிகவும் சுமுகமான முறையில் தமிழ்நாடு முதல்வரால் கொண்டு செல்லப்பட்டு வருகிறது” என்றார்.