அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக துணியாது: ராகுல் காந்தி

பாஜக அதிக சலசலப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அரசியல் சாசனத்தை மாற்றும் அளவுக்குத் துணியாது என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள மகாத்மா காந்தி இல்லமான மணி பவனில் இருந்து, கடந்த 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய ஆகஸ்ட் கராந்தி மைதானம் வரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நீதி சங்கல்ப பாதயாத்திரை’ சென்ற ராகுல் காந்தி, அதற்கு பின்னர் நடந்த பொதுச் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் இறுதி நாளான இன்று அவர் பிரதமர் மோடி, அதானியை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

பாஜக அதிக சலசலப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் அரசியலமைப்பை மாற்றும் தைரியம் அதற்கு இல்லை. உண்மையும் எங்களின் பக்கம் இருக்கிறது. நாட்டு மக்களும் எங்கள் பக்கமே இருக்கின்றனர். இப்போது நடக்கும் போர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையிலானது மட்டும் இல்லை. அது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலானது. ஒரு சித்தாந்தம் இந்த நாடு அனைத்து அறிவுகளையும் கொண்ட ஒருவரால் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று கருதுகிறது. அதற்கு நேர்மாறாக நாங்கள் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். மக்களின் குரல் கேட்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம்.

ஐஐடியில் ஒருவர் பட்டம் பெறுவது மட்டும் அவரை விவசாயிகளை விட அறிவாளியாக ஆக்கிவிடாது. பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அறிவு ஒருவரிடம் மட்டுமே இருக்கிறது என்று எண்ணுகின்றனர். விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையில்லா இளைஞர்கள் அறிவாளிகள் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம்தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் வழியாக இந்த பயணம் மும்பை வந்தடைந்தது. ராகுல் காந்தி தனது 63 நாள் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை, சனிக்கிழமை மகாராஷ்டிராவின் சத்திய பூமியில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தி நிறைவு செய்தார். அப்போது அவர் அரசியல் சாசனத்தின் முன்னுரையை அவர் வாசித்தார். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் மும்பை சத்ரபதி சிவாஜி அரங்கில், இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் நிறைவுவிழா மற்றும் இந்தியா கூட்டணிகட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அகில இந்திய காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ளது. அதில் பங்கேற்பதற்காக இன்று காலை ஸ்டாலின் மும்பை புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.