அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்!

டெல்லி புதிய மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்டுள்ளது 9-வது சம்மனாகும். இதில் பணமோசடி வழக்கு தொடர்பாக வரும் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி தெரிவித்துள்ளது.

முன்னதாக இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை ஏற்கனவே 8 சம்மன்களை அனுப்பி இருந்தது. இந்த சம்மன்கள் சட்டவிரோதமானவை எனக் கூறி விசாரணைக்கு ஆஜராகாமல் கெஜ்ரிவால் சம்மன்களைத் தவிர்த்திருந்தார். இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகக் கோரி அனுப்பிய சம்மன்களை தொடர்ந்து நிராகரித்தது தொடர்பாக அமலாக்கத் துறை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இவ்விவகாரத்தில் இரண்டு புகார் மனுக்களை அமலாக்கத் துறை தொடர்ந்திருந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத் துறை இன்று மீண்டும் புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது.

அமலாக்கத் துறையின் புதிய சம்மன் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதற்கான மாற்றுத் திட்டம் என்று டெல்லி அமைச்சர் அதிஷி கூறியுள்ளார். அவர் கூறுகையில், “இந்த டெல்லி ஜல் போர்டு வழக்கு என்ன என்பது யாருக்கும் தெரியாது. எப்படியாவது அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து அவரை தடுப்பற்கான அமலாக்கத் துறையின் மாற்றுத் திட்டம் இது என்பதாகவே தெரிகிறது” என்று கூறியுள்ளார்.