கனடாவில் வசித்து வந்த இந்தியத் தம்பதி குடும்பத்துடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படி இந்தியர்கள் விரும்பி செல்லும் வெளிநாடுகளில் முக்கியமானதாகக் கனடா இருக்கிறது. அங்கே கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். கனடா மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும், இப்போது அங்கே நடந்துள்ள மோசமான விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இந்திய வம்சாவளி தம்பதியினர் வசித்து வந்த வீடு திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து உள்ளது. இதில் அந்த தம்பதி மற்றும் அவர்களின் இளம்பெண் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் முழுமையாக எரிந்த நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 7ஆம் தேதியே இந்தச் சம்பவம் நடந்த போதிலும் உயிரிழந்தது யார் என்பது சமீபத்தில் தான் கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த தம்பதி 51 வயதான ராஜீவ் வாரிகோ, அவரது மனைவி 47 வயதான ஷில்பா கோத்தா மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிக் ஸ்கை வே என்ற பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் அவர்கள் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டன.
முதலில் போலீசார் இதை எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து என்றே நினைத்தார்கள். இருப்பினும், விசாரணையில் தீ விபத்து தற்செயலானது இல்லை என்பது தெரிய வந்தது. தீ சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அப்பகுதியில் விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் தீ விபத்திற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இது கொலை வழக்காக இருக்கலாம் என்று இந்த விபத்து தற்செயலாக ஏற்பட்டது போலத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். அங்கே முழுமையாக தீ பரவும் முன்பு, ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர், அதன் பிறகு சில நிமிடங்களிலேயே தீ வீடு முழுக்க பரவியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாக்குமூலங்கள் இந்த சம்பவத்தை மேலும் சிக்கலான ஒன்றாக மாற்றுகிறது.
சம்பவம் நடந்த அன்று தீ அணைக்கப்பட்ட பிறகு, எரிக்கப்பட்ட வீட்டிற்குள் மனித எலும்புக் கூடுகளை போலீசார் கண்டுபிடித்தனர், இருப்பினும், அவை மிக மோசமான நிலையில் இருந்ததால் எத்தனை பேர் உயிரிழந்தனர்.. அவர்கள் யார் என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை,. தீவிர விசாரணைக்குப் பின்னரே விபத்தில் உயிரிழந்தோர் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கு முன்னர் அந்த தம்பதி தங்கள் மகளுடன் இந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், இப்போது அவர்கள் மூன்று பேரும் பலியாகியுள்ளனர். இந்த மரணம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்ட போது அங்கே அருகே இருந்த சூழ்நிலைகள் கவனத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள போலீசார், இது தொடர்பான வீடியோ கிடைத்தால் உடனடியாக தங்களைத் தொடர்பு கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.