அமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக் களறி ஏற்படும்: டிரம்ப்

அமெரிக்கா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்குகிறார். இந்த நிலையில், “என்னை வெற்றி பெற வைக்காவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று டொனால்டு டிரம்ப் ஆவேசமாக பேசினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டிரம்ப் தொடங்கியுள்ளார். அந்த வகையில், ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிட்ரம்ப், தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்தார்.

டொனால்டு டிரம்ப் பேசுகையில், “அமெரிக்கா வரலாற்றில் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும். தன்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தகளறி ஏற்படும்” என்றார். ஆனால் எதற்காக இப்படி டிரம்ப் பேசினார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. அமெரிக்காவில் ஆட்டோ இன்டஸ்ட்ரீஸ்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பேசும் போது இவ்வாறு டிரம்ப் கூறியதால், தொழில் துறை தொடர்பாக எச்சரிக்கும் விதமாக பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளராவதற்கு, 1,968 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், 2,099 பேரின் ஆதரவு ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது. குடியரசு கட்சியில் 1,215 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில், 1,228 பேரின் ஆதரவுகளை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அதிபர் பதவிக்கான ரேஸ் தொடங்கியுள்ளது.