தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அதை மீறும் வகையில், மத ரீதியான வெறுப்புப் கருத்துக்களை பேசியதற்காக பெங்களூரின் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கர்நாடக தலைநகர் பெங்களூரின் சித்தன்னகல்லியில் இந்து மதத்தை சேர்ந்தவர் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் 17ம் தேதி மாலையில் இவரது கடையில் அனுமான் பாடல்கள் ஒலிக்கப்பட்டதாகவும், அப்போது கடை பக்கமாக நடந்து வந்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் இந்த பாடல்கள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது, “மசூதியில் பாங்கு ஒலிக்கும் நேரம் இது. இப்போது அனுமன் பாடல்களை இசைக்கக்கூடாது” என்று வாக்குவாதத்தில் அந்த இளைஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் எனவும், இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி, கடையின் உரிமையாளரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர் என்றும் பாஜகவினர் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், இளைஞர்களின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாஜக தலைவர்கள், ஆளும் காங்கிரஸ் கட்சி இந்த தாக்குதலுக்கு பின்னாள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
பெங்களூர் தெற்கு லோக்சபா தொகுதி எம்பியான தேஜஸ்வி சூர்யா, “கடையில் பஜனை பாடல்களை ஒலிபரப்பியதற்காக கடைக்காரர் தாக்கப்பட்டிருக்கிறார். பாங்கு ஒலிக்கும் நேரத்தில் பஜனை பாடல்களை இசைக்கக்கூடாது என்று கூறியுள்ளார். காங்கிரஸின் சமாதன அரசியலின் விளைவுதான் இது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜிஹாதிகளுக்கு கிடைத்த அரசியல் ஆதரவால், இயற்கையாகவே இந்துக்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நம் மாநிலத்தில் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஆனால், தேஜஸ்வி சூர்யாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. அம்மாநில அமைச்சரான தினேஷ் குண்டுராவ், “பாஜவினர் குறிப்பிடுவதை போல இது இந்து – இஸ்லாமியர்களுக்கான சண்டை கிடையாது. பாங்கு ஒலிக்கும் நேரத்தில் பஜனை ஒலிக்கப்பட்டதற்காக கடைக்காரர் தாக்கப்படவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்துக்களும் இருந்திருக்கிறார்கள். எனவே, இது எப்படி இந்து – இஸ்லாமியர்கள் மோதலாக இருக்க முடியும்? அனுமன் பாடல்களை ஒலிக்கப்பட்டதற்காக, கடைக்காரர் தாக்கப்பட்டதாக யார் சொன்னது?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இருப்பினும், பாஜக இன்று போராட்டத்தை நடத்தியிருந்தது. இதில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்எல்ஏ எஸ் சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இவர்கள் போராட்டத்தின்போது திடீரென பேரணி நடத்த முயன்றனர். ஆனால், போலீசார் இதற்கு அனுமதி மறுத்து அனைவரையும் கைது செய்துள்ளனர். லோக்சபா தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மதத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தலில் வாக்கு சேகரிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்று பாஜக நடத்திய போராட்டம் மத உணர்வுகளை தூண்டுவதாக இருந்ததாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அதை மீறும் வகையில், மத ரீதியான வெறுப்புப் கருத்துக்களை பேசியதற்காக பெங்களூரின் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கைது செய்யப்பட்டிருக்கிறார்.