காங்கிரஸ் தலைவர்கள் கள யதார்த்தத்தை பார்ப்பதே இல்லை: அண்ணாமலை!

பிரதமர் மோடி கவனிக்க வேண்டியவை என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் பகிர்ந்த பதிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி பிரச்சாரத்துக்காக சேலம் பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு கேரளாவின் பாலக்காடுக்குச் செல்கிறார். இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ‘பிரதமர் கவனிக்க வேண்டியவை’ என சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் தனது பதிவில் கூறியுள்ளதாவது:-

கடந்த சில வாரங்களாக தமிழகத்துக்கு அடிக்கடி செல்லும் பிரதமர் மோடி வரலாறு காணாத வகையில் அந்த மாநிலத்தை நிகராரித்துள்ளார். உதாரணமாக, 2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலால் மாநிலம் பாதிக்கப்பட்டபோது பிரதமர் அங்கு செல்லவில்லை. புயலுக்கு பிறகான மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக ரூ.37,907 கோடியை விடுவிக்கும்படி மாநில முதல்வர், மோடி அரசை பலமுறை வலியுறுத்தினார். தமிழக மாநிலத்தின் இந்த நெருக்கடியை சரிசெய்ய மோடி திட்டமிடுகிறாறா?

சேலத்துக்கு செல்லும்போது பிரதமர் மோடி, அங்கு பல நிறுவனங்கள் மூடப்பட்டும், தொழிலாளர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டிருப்பதையும் காண்பார் என்று நான் நம்புகிறேன். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் திட்டமிடப்படாத கோவிட் ஊரடங்கு மூலம் சிறு, குறு தொழில்களை ஒரே நேரத்தில் அழித்த பின்னர் அவற்றை மீட்டெடுப்பதற்கு அவரிடம் என்ன பார்வை உள்ளது?

பிரதமர் மோடி சோமாலியாவுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்திய மாநிலம் கேரளா. வளர்ச்சி குறியீட்டில் மற்ற எல்லா மாநிலங்களை விடவும் கேரளா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கேரளா குறித்து தவறான கருத்தை சொன்னதற்காக மாநில மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்பாரா?

மேற்கு தொடர்ச்சி மலையின் தாயகமான கேரளா மிகவும் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பாகும். கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் தலைமையிலான ஆட்சியில் அது தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கிய நன்கொடைக்கு பிரதிபலனாக தனது கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவுவதற்காக மோடி அரசு நாட்டின் அனைத்து வன மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போக செய்திருக்கிறது. தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போக செய்யும்போது என்ன யோசித்தார் என்று பிரதமர் தெளிவுபடுத்துவாரா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷின் இந்தக் கேள்விகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

ஜெய்ராம் ரமேஷ் அவர்களே, தமிழகத்தின் பெருமையான ஜல்லிக்கட்டை தடை செய்தவர்களுக்கு இப்போது தமிழகத்தின் மீது புதிய பாசம் (தேர்தல் நெருங்குவதால் வரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது). கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் கள யதார்த்தத்தை பார்ப்பதே இல்லை. கடந்த 1980-களில் இருந்து காங்கிரஸ் தனது ரொட்டி, கப்படா, மக்கான் என்ற தேர்தல் வாக்குறுதியை மாற்றவே இல்லை.

வெள்ள நிவாரணத்துக்காக தமிழகம் கேட்ட தொகை ரூ,15,645 கோடி (மக்களவையில் நிதியமைச்சகத்தால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது), மாறாக, ரூ.37,907 கோடி இல்லை. நாங்கள் அவர்களிடம் (திமுக அரசு) வெள்ள நிவாரணமாக ரூ.37,907 கோடி கோரியதற்கான விபரங்களைக் கேட்டோம். அவர்கள் தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார்கள். இந்த விஷயத்தை அரசியலாக்குவதற்கு முன்பாக தனது கூட்டணிக் கட்சியிடம் தேவையான தகவல்களை ஜெய்ராம் ரமேஷ் வாங்கித்தர முடியுமா?

வெள்ளத்துக்கு முன்பாக 99 சதவீதம் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக சொன்ன திமுக அரசு, வெள்ளத்துக்கு பின்பு 42 சதவீதம்தான் நிறைவடைந்ததிருந்தது என மாற்றிப் பேசியதை ஜெய்ராம் அறிவாரா?

தமிழகத்தின் கைத்தறி தொழில் திமுக அரசின் இயலாமையினால்தான் தள்ளாடி வருகிறது. மின்சார கட்டணம் 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பீக் ஹவர் கட்டணம் 35 கிலோ வாட்சில் இருந்து 150 கிலோ வாட்சாக உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தர கட்டணம் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது.

இலவச வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தில் திமுக அரசு நடத்திய மிகப் பெரிய ஊழலை தமிழக பாஜக சமீபத்தில் அம்பலப்படுத்தியது. தமிழக கைத்தறித் துறை அமைச்சர், கைத்தறி தொழிலாளர்களுக்கு ஆர்டர் வழங்க குறிப்பிட்ட தொகையை கமிஷனாக பெற்றுக்கொண்டு தொழிலாளர்களைச் சுரண்டுகிறார்.

திமுக அரசின் இயலாமையினால் அம்பத்தூர் தொழில்பேட்டை வெள்ளத்தில் மூழ்கியபோது எங்களின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தொழில்களை மீண்டும் தொடங்க காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

எனவே, ஜெய்ராம் ரமேஷ் அவர்களே.. கேள்வி கேட்பதற்கு முன்பு அதற்காக முன்தயாரிப்பை சரியாக செய்யுங்கள். உங்களுடைய கேள்விகள் திமுக அரசிடம் கேட்கப்பட வேண்டியவை, பிரதமர் மோடியிடம் இல்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.