தமிழர்கள் குண்டு வைத்தார்களா?: பாஜக அமைச்சருக்கு உதயநிதி கண்டனம்!

மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே வுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள புரூக்ஃபீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி பட்டப்பகலில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக குண்டு வெடிக்கவைக்கப்பட்டது? தீவிரவாதிகளின் செயலா? வெளிநாட்டு சதியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. முதலில் பெங்களூர் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கியது. ஆனால், பின்னர் என்ஐஏ வசம் விசாரணை சென்றது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சந்தேக நபர் தற்போது பிடிபட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “மத்திய அமைச்சர் ஷோபாவின் விஷமத்தனமான அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், பாஜக அமைச்சர் எப்படி இவ்வளவு அபத்தமான கருத்தை தெரிவித்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பா.ஜ.க.வின் இழிவான பிரித்தாளும் அரசியல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பாஜகவின் கேவலமான கூற்றுகளை தமிழர்களும், கன்னட சகோதர சகோதரர்களும் நிராகரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்ஐஏ இவரையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமது மகத்தான தேசத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வெறுப்புப் பேச்சுக்காக அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.