பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பிற்குத் தமிழர்கள் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது சர்ச்சையான நிலையில், அதற்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. பெங்களூர் ப்ரூக்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே கடந்த மார்ச் 1ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முதலில் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்னர் இந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. சர்ச்சை: என்ஏஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்துள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சூழலில் பாஜக மத்திய வேளாண் இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறிய கருத்துகள் சர்ச்சையானது. பெங்களூரில் பாஜக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பெங்களூரில் தமிழர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். கர்நாடகா மீது தாக்குதல் நடத்தும் அவர்கள் மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், வேறு சில இடங்களில் வந்தவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போடுவதாகவும் அவர்களைத் தடுக்கவும் நடவடிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார்.
இதைச் சொன்ன அவர் கேரள மாநிலத்தையும் விட்டுவைக்கவில்லை. கேரளாவில் இருந்து வருபவர்கள் இங்கு மாணவர்கள் மீது ஆசிட் வீசுவதாகவும் அவர்களையும் கர்நாடக அரசு தடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக ஷோபா கரந்தலாஜே கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பாஜகவின் இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் இந்தக் கருத்துக்குத் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.