அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களையும் மாற்ற வேண்டும்: திமுக எம்பி!

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும், உள்துறை செயலாளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில், இதேபோல அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களையும் தேர்தல் முடிவும் வரை மாற்ற வேண்டும் என திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை போலவே இந்த முறையும், 7 கட்டங்களாக தேர்தலை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கிடையில் தேர்தல் ஆணையம் எதிர்கொள்ளும் 4 சவால்களை பட்டியலிட்டிருக்கிறது. அதாவது, கடந்த 2017-2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட பணத்தை விட 2022-2023ம் ஆண்டு நடைபெற்ற 11 மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது 835% அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் பண விநியோகம் என்பது மிகப்பெரிய பிரச்னை. இரண்டாவது பிரச்னை, ஆள் பலம். பூத் கேப்சர், தேர்தலை முடக்கும் வகையில் பிரிவினை சக்திகளை மேற்கொள்ளும் தாக்குதல் சம்பவங்களை முறியடிப்பது தேர்தல் ஆணையத்திற்கான பிரதான பணியாக இருக்கிறது. தேசிய எல்லை, மாநில எல்லைகளில் போதுமான அளவு துணை ராணுவப்படைகளை வைத்திருப்பது, செக்போஸ்ட்களை அமைத்து சோதனை நடத்துவது, 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை, போதுமான அளவு ஆயுத கையிருப்பு, ட்ரோன்களை கொண்டு கண்காணிப்பு போன்ற பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இப்படியாக பல்வேறு விஷயங்களில் தேர்தல் ஆணையம் தீவிரமாக இயங்கி வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18ம் தேதி உத்தரப் பிரதேசம் உட்பட 6 மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. இதன்மூலம் குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை மாற்றப்பட்டிருக்கின்றனர். அதேபோல மேற்கு வங்க மாநிலத்தின் டிஜிபி ராஜீவ் குமாரை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இது தவிர மிசோரம், இமாச்சலப் பிரதேசத்தின் பொது நிர்வாகத்துறை செயலாளர்களை மாற்ற அதிரடி உத்தரவு பறந்திருக்கிறது.

இந்நிலையில், காவல்துறை அதிகாரிகளையும், அரசு உயர் அதிகாரிகளையும் தேர்தல் நேரத்தில் மாற்றுவதை போல, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களையும் தேர்தல் முடிவும் வரை மாற்ற வேண்டும் என திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது சில டிஜிபிகள் மற்றும் உயர் அதிகாரிகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது தேர்தல் ஆணையத்தின் வழக்கம். அரசாங்கத்துடன் நெருக்கமாக இருக்கும் அதிகார வர்க்கத்தினர் தேர்தலின் புனிதத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இப்படி செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக ஏவி எதிர்க்கட்சிகளை குறிவைத்து வருகிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு பொருந்தாதா? அப்படியெனில் மாநில அரசுகளுக்கு ஒரு விதி, மத்திய அரசுக்கு ஒரு விதியா? தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைத் தடுக்க வருமான வரித்துறை களம் இறங்கியிருப்பது, அது மத்திய அரசின் பிடியிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. அதேபோல தனது அரசியல் முதலாளிகளை திருப்திப்படுத்த, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது.

எனவே, தேர்தல் நடைமுறையின் தூய்மையைப் பாதுகாக்கும் வகையில், தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வருமான வரித் துறையின் இயக்குநர் ஜெனரல்கள், அமலாக்க இயக்குநரகத்தின் இயக்குநர் மற்றும் சிபிஐ இயக்குநர் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவது, நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம், தேர்தல் ஆணையத்தின் ஆணை. ஜனநாயகத்தின் திருவிழாவை மாசுபடுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.