ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை!

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், எதிர்பார்த்ததைவிட உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கடந்த 4 வாரங்களாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஜக்கி வாசுதேவ் உடல்நிலை குறித்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் நிபுணர் வினித் சூரி பேசும் விடியோவையும் ஈஷா அறக்கட்டளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் மருத்துவர், ”கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து வருகிறார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மருத்துவமனையில் இருந்தவாறு ஜக்கி வாசுதேவ் பேசும் விடியோவையும் அவரின் சமூகவலைதளப் பக்கத்தில் ஈஷா நிறுவனம் பகிர்ந்துள்ளது. ”நான் டெல்லியில் இருக்கிறேன். நரம்பியல் நிபுணர்கள் என்னுடைய மண்டையைத் திறந்தனர். அதில் ஏதேனும் உள்ளதா எனப் பார்த்தனர். ஆனால், அங்கு ஒன்றுமில்லை. முழுவதும் காலியாக இருப்பதால் மீண்டும் பழையபடி தையலிட்டுவிட்டனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.