தமிழ்நாட்டில் ஏப்ரல் 13 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை!

ஏப்ரல் 13-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 1-9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடத்தப்படும். 2019ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெல்லும் கூட்டணியே அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவை ஆளப்போகிறது. இந்த தேர்தலில் 98 கோடி மக்கள் வாக்களிக்க போகிறார்கள். லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பள்ளி இறுதி தேர்வை முன்கூட்டியே முடிக்க வேண்டிய கட்டாயம் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ஏற்பட்டது. வழக்கமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு நடைபெறுவது வழக்கம். தற்போது பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற மார்ச் 22-ந் தேதியான நாளை முடிகிறது. பிளஸ்-1 மாணவர்களுக்கு வருகிற மார்ச் 25-ந் தேதியுடனும் தேர்வு முடிகிறது. இதனிடையே எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வை நடத்திய முடக்கிய வேண்டிய நிலைக்கு பள்ளிக்கல்வித்துறை தள்ளப்பட்டுள்ளது, ஏனெனில் வழக்கமாக லோக்சபா தேர்தல் பணிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சியினை தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தேர்தல் ஆணையம் வழங்கும். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வை தேர்தல் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துவது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

“18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும், 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 23.04.2024 முதல் 26.04.2024 வரையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 26.04.2024 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் 1 முதல் 5 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணையும், 6 முதல் 9 ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அட்டவணையில், ஏப்ரல் 2ம் தேதி 12ம்தேதி வரை தேர்வு நடைபெறகிறது.