அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்துள்ள அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி அருணாச்சலுக்கு சென்றதைத் தொடர்ந்து அப்பகுதி மீது சீனா மீண்டும் உரிமை கோரியிருக்கும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் இணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கீகரிக்கிறோம். அப்பிராந்தியத்தின் மீது உரிமைகோரும் நடவடிக்கையாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே நடைபெறும் ஆக்கிரமிப்பு, ராணுவம், பொதுமக்கள் ஊடுருவல் போன்ற முன்னெடுப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தின் தொடக்கத்தில், சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் சீனியர் கலோனல் ஜாங் ஜியோகங், “ஜிசாங்கின் (திபெத்) தெற்கு பகுதி சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியா, அந்தப் பகுதியை அருணாச்சலப் பிரதேசம் என்று அழைப்பதை சீனா விரும்பவில்லை, கடுமையாக எதிர்க்கிறது” என்று தெரிவித்திருந்தார். அருணாச்சல் பகுதிக்கு ஜங்னான் என்று பெயரிட்டுள்ள சீனா, தனது கூற்றினை முன்னிலைப்படுத்த அருணாச்சலப் பிரதேசத்துக்கு செல்லும் இந்தியத் தலைவர்களின் வருகைக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
முன்னதாக, மார்ச் 9ஆம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள 13,000 அடி நீள சே – லா சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்தச் சுரங்கப்பாதை அனைத்து கால நிலைகளிலும் இணைப்பு வசதியைத் தருவதுடன், ராணுவத் துருப்புகள் விரைவாக அங்கு செல்ல உதவியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரும் சீனாவின் நடவடிக்கையை பல முறை நிராகரித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் வலியுறுத்தி வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், “அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கோரும் சீனாவின் அறிக்கை மிகவும் அபத்தமானது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பகுதியாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்” என்று தெரிவித்திருந்தது.