ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தை கட்சியினர் அணுக முடியாதபடி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி முக்கியத் தலைவருமான அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தின் அனைத்து பக்கங்களிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது ஒரு தேசிய கட்சியின் அலுவலகத்தைப் பயன்படுத்துவதை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? இது நமது அரசியலமைப்பு அளித்துள்ள சமநிலைக்கு எதிரானது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு அமைச்சரான சவுரப் பரத்வாஜ், “ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்குச் செல்வது மத்திய அரசால் தடுக்கப்பட்டுள்ளது. ஐடிஒ மார்கில் உள்ள ஏஏபி கட்சி அலுவலகத்துக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் மத்திய அரசு மூடியுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம்” என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இதையடுத்து நேற்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரியது. இதையடுத்து, வரும் 28-ம் தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.