மாஸ்கோவில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற தாக்குதல்: பலி 150 ஆக உயர்வு!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமையன்று மாஸ்கோவின் கிராக்கஸ் சிட்டி ஹால் அரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி அரங்கத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடிகுண்டுகளையும் வீசிச் சென்றனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 115 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுமார் 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பயங்கர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட உலகம் முழுவதும் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.