லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் இராமநாதன் தேமுதிகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் என 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பெயர்களை பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்டார். அதில், திருவள்ளூர் (தனி) – கு.நல்லதம்பி, மத்திய சென்னை – ப.பார்த்தசாரதி, கடலூர் – சிவக்கொழுந்து, தஞ்சாவூர் – சிவநேசன், விருதுநகர் – விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து வந்தார் தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன். ஆனால், தஞ்சாவூர் மாநகர தேமுதிக அவைத் தலைவராக இருந்த சிவநேசன் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டதால் ராமநாதன் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, ராமநாதன் தேமுதிகவில் இருந்து விலகி கூண்டோடு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்தன. தஞ்சாவூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கருப்பு முருகானந்தம் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரபரத்தன.
தேமுதிக vs பாஜக vs திமுக நேருக்கு நேர் மோதும் தஞ்சாவூர் தொகுதியில் தேமுதிக மாவட்ட செயலாளரே பாஜக பக்கம் தாவப் போவதாக தகவல் வந்த நிலையில் உடனடியாக ஆக்ஷன் எடுத்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் இராமநாதன், தேமுதிகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த டாக்டர். ப.இராமநாதன் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், இவர் மாவட்ட கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (23.03.2024) முதல் நீக்கப்படுகிறார். இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக T.V.T.செங்குட்டுவன் இவர் இன்று (23.03.2024) முதல் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.