திகார் சிறைக்கு கெஜ்ரிவாலை வரவேற்கிறேன்: சுகேஷ் சந்திரசேகர்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி உள்ளமுதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவராக மாற சுகேஷ் சந்திரசேகர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். வரும் 28-ம் தேதி வரை அவரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில், பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி டெல்லி திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குழுவுக்கு எதிராக அப்ரூவராக (அரசுத் தரப்பு சாட்சி) மாறப் போகிறேன். அவர்களின் முறைகேடுகள் குறித்த தகவலை வெளிப்படுத்துவேன். அவர்களுக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் வழங்கி உள்ளேன். உண்மை வென்றுள்ளது. திகார் சிறைக்கு கெஜ்ரிவாலை வரவேற்கிறேன்” என்றார்.

ரெலிகோர் பின்வெஸ்ட் நிறுவனத்தில் நிதி முறைகேடு செய்ததாக நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது மனைவி அதிதி சிங்கை தொடர்பு கொண்ட சுகேஷ் சந்திரசேகர், மத்திய அரசு அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். மேலும் ஷிவிந்தர் சிங்கை ஜாமீனில் எடுப்பதாகக் கூறி அவரிடம் பணம் வசூலித்துள்ளார். இதுதவிர மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்களிடம் முறைகேடாக பணம் வசூலித்ததாக புகார் எழுந்ததால் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.