தேனி, திருச்சியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் தேனி, திருச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்தார் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் புதுவையில் உள்ள ஒரு தொகுதிக்கும் என 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கும் நேரம் முதலே தேர்தல் களம் பரபரப்படைந்தது. இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள் பம்பரம் போல் சுழல்கிறார்கள். அந்த வகையில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நடைபெறுகிறது.

பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, தமாகா, தமிழர் மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை கூட்டணி அமைதுள்ளன. இதில் அமமுக திருச்சி, தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்றைய தினம் டிடிவி தினகரன் அறிவித்தார். தேனியில் டிடிவி தினகரனே போட்டியிடுகிறார். திருச்சியில் அமமுக மாவட்டச் செயலாளர் செந்தில் நாதன் போட்டியிடுகிறார். தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என நேற்றைய தினம் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அவரும் அவரது மகனும் கேட்டதற்கிணங்க டிடிவி தினகரன், தேனியில் போட்டியிடுகிறார். டிடிவி தினகரனுக்கு நன்றிக் கடனாக தேனியை கொடுத்தோம் என தெரிவித்திருந்தார்.

அது போல் திருச்சியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமமுகவிலும் முக்கிய தலைவர்கள் யாரும் இல்லை என்றே கருதப்பட்ட நிலையில் இன்று தன்னுடன் சேர்த்து இரு வேட்பாளர்களை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தேனி தொகுதி டிடிவி தினகரனுக்கு நல்ல அறிமுகம் உள்ள தொகுதி. கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அவர் வென்றுள்ளார், 2004 ஆம் ஆண்டு அங்கு போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.