டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் வரும் 31-ம்தேதி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கடந்த 2021-22-ம் ஆண்டில் மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் மதுபானங்களை மொத்த விற்பனை செய்பவர்கள் 12 சதவீதமும், சில்லறை விற்பனையாளர்கள் 185 சதவீதமும் லாபம் ஈட்டும் வகையில் மதுபான கொள்கை கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சிக்குரூ.100 கோடி லஞ்சம் கிடைத்ததாகவும், இந்த ஊழலில் மூளையாக செயல்பட்டது டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் என்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் மணீஷ்சிசோடியா, சங்சய் சிங் உட்பட பலர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர். இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த 21-ம் தேதிஅவரை அமலாக்கத் துறை கைதுசெய்து, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அவரிடமும், இந்த ஊழலில் தொடர்புடையதாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 31-ம் தேதி மிகப் பெரிய போராட்டத்தை நடத்த இண்டியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்ததலைவருமான கோபால் ராய் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்த விதம், அரசியல் சாசனத்தை மதிக்கும் நாட்டு மக்கள் அனைவரது மனதிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒவ்வொன்றாக அழிக்கும் நடவடிக்கை. மத்திய விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். எம்எல்ஏக்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றனர், அல்லது பாஜகவில் இணையுமாறு அச்சுறுத்தப்படுகின்றனர். இதற்கு மறுப்பவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கெஜ்ரிவால் மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அச்சுறுத்தப்படுகின்றன.
அர்விந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை கண்டித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் வரும் 31-ம் தேதி மிகப் பெரிய போராட்டத்தை இண்டியா கூட்டணி நடத்த உள்ளது. இதில் இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறும்போது, ‘‘நாட்டில் மிக பெரிய புரட்சிகள் எல்லாம் ராம்லீலா மைதானத்தில் இருந்துதான் தொடங்கியுள்ளன. அதுபோல இந்த போராட்டமும் அமையும்’’ என்றார்
டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி கூறியபோது, ‘‘ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. ஜனநாயகத்தை காக்க ராகுல் போராடுகிறார். இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். வரும் 31-ம் தேதி நடக்க உள்ளது அரசியல் போராட்டம் மட்டுமல்ல, நாட்டின் ஜனநாயகத்தை காக்கும் போராட்டம். பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக குரல்கொடுக்கும் போராட்டம்’’ என்றார்.