லோக்சபா தேர்தலுக்காகக் காஞ்சிபுரத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்குக் குறைவாகவே இருப்பதால் தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராகச் செல்வம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். காஞ்சிபுரத்தில் உதயநிதி பேசியதாவது:-
பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார். இதுவரை அவர் தமிழ்நாட்டிற்கு எதாவது ஒரு நல்ல விஷயத்தையாவது செய்துள்ளாரா. 2019இல் இங்கே மதுரைக்கு வந்து எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுகிறேன் என்று சொல்லி அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார். நேற்று எடப்பாடி பழனிசாமி திருச்சியில் என்னைப் பற்றிப் பேசியுள்ளார். சும்மா உதயநிதி கல்லைக் கல்லை காட்டிக் கொண்டு இருக்கிறார் என்று எடப்பாடி சொல்லியுள்ளார். இது தான் மோடி, எடப்பாடி, அமித்ஷா ஆகியோர் 2019இல் அடிக்கல் நாட்டும் போது வைத்த அந்த கல்.. அங்கே அவர்கள் வைத்தது இந்த ஒரு கல்லை மட்டும் தான். அதையும் நான் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். நீங்க அங்கே மருத்துவமனையைக் கட்டும் வரை நான் திருப்பி தர மாட்டேன். நிச்சயம் தர மாட்டேன்.
எடப்பாடி என்ன சொல்கிறார். உதயநிதி மாற்றிப் பேச வேண்டும். திரும்ப திரும்ப கல்லை எடுத்துப் பேசுகிறார். நானாவது எய்ம்ஸ் கல்லைத் தான் காட்டினேன். இங்கே ஒருவர் பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார் பாருங்க” என்று சொன்ன உதயநிதி 2019 எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, அப்போதைய முதல்வர் எடப்பாடி ஆகியோர் இருந்த படத்தை எடுத்துக் காட்டினார்.
மேலும் உதயநிதி, “நானாவது கல்லைத் தான் காட்டினார். ஆனால் எடப்பாடி பல்லைக் காட்டிக் கொண்டு இருக்கிறார். கல்லை வைத்து விட்டு பல்லைக் காட்டிய போட்டோ தான் இது. இப்படி இருந்துவிட்டு எடப்பாடி இப்போது என்னை ஸ்கிரிப்ட்டை மாற்றிப் பேசுங்கள் என்கிறார். நான் ஏன் ஸ்கிரிப்ட்டை மாற்ற வேண்டும். நான் ஏன் எனது கொள்கையை மாற்ற வேண்டும். எங்களின் ஒரே கொள்கை இதுதான். எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும். நீட் தேர்வு வேண்டாம். மாநில சுயாட்சி வேண்டும்.. இதுவே எங்கள் கொள்கை.. என்னால் உங்களை போல நேரத்திற்கு தகுந்தபடி ஆளுக்கு தகுந்தபடி ஸ்கிரிப்ட்டை மாற்றி பேச முடியாது. ” நீங்கள் ஓபிஎஸ்ஸிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், சசிகலாவிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள், மோடியிடம் ஒரு மாதிரி பேசுவீர்கள். தீபாவை பார்த்தால் ஒரு மாதிரி பேசுவீர்கள்.. தீபாவின் டிரைவரை பார்த்தால் ஒரு மாதிரி பேசுவீர்கள்.. உங்களை போல மாற்றி மாற்றி பேச திமுகக்காரன் ஒன்றும் பச்சோந்தி இல்லை. நான் கருணாநிதியின் பேரன். நான் எனது கொள்கைகளை தான் பேசுவேன். மாநில உரிமைகளை மீட்க தேவையானதை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.