மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக பாஜக இதுவரை 4 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 111 பேர் அடங்கிய 5-வது பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாயா மேற்கு வங்க மாநிலம் தாம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தொழிலதிபர் நவீன் ஜிண்டால் நேற்று பாஜகவில் இணைந்தார். இவர் ஹரியாணா மாநிலம் குருஷேத்ரா தொகுதி யில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேனகா காந்தி (சுல்தான்பூர்) நித்யானந்த் ராய் (உஜியார்பூர்), கிரிராஜ் சிங் (பெகுசாரை), ரவி சங்கர் பிரசாத் (பாட்னா சாஹிப்), நடிகை கங்கனா ரணாவத் (மண்டி), சீதா சோரன் (தும்கா), ஜெகதிஷ் ஷெட்டர் (பெல்காம்), கே.சுதாகரன் (சிக்கபல்லாபூர்), தர்மேந்திர பிரதான் (சம்பல்பூர்), சாம்பிட் பத்ரா (புரி), ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் (மீரட்) உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.