“என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி.உதயகுமாருக்கு தகுதியும் இல்லை, திறமையும் இல்லை” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்கான வேட்புமனுவை இன்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
சின்னங்களை காட்டிலும் வேட்பாளர்களின் கடந்த கால அரசியல் வரலாறு முக்கியம். கடந்த காலங்களில் எவ்வளவு மக்கள் பணிகளை செய்துள்ளார் என்பதை பொறுத்து வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, மீனவர்களின் துயரங்கள் ஆகியற்றவற்றை முன்வைத்து எனது பிரச்சாரம் இருக்கும். அதிமுக தொடர்பாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அதிமுகவில் முன்பு எனக்காக வேலை பார்த்தவர்கள், இப்போது எனக்கு எதிராக வேலைப் பார்க்கிறார்கள். இது காலச் சூழ்நிலை. யாரையும் பொதுவாக இதில் குற்றம்சாட்ட முடியாது. என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி.உதயகுமாருக்கு தகுதியும் இல்லை, திறமையும் இல்லை. வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கேட்டுள்ளேன். ராமநாதபுரம் தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.