தற்போது நடைபெறும் தேர்தல் சமூக நீதிக்கும் மனு நீதிக்கும் இடையேயான தேர்தல் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டம் கலைஞர் திடலில் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரன் வாக்குகளை சேகரித்தார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
இந்த முறை கள்ளக்குறிச்சி மக்களவைத் தேர்தலில் களமிறங்கியுள்ள மலையரசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஆனால் திமுகவினரிடம் மெத்தனப் போக்கு உள்ளது. அவர்கள் அனைவரும் வாக்குப்பதிவு முடியும் வரை போராட்டக் குணத்தோடு இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சியினர் அதுபோன்று இருப்பார்கள். எனவே கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கொடுங்கள். அப்போது தான் வெற்றி சாத்தியம்.
மேலும், எதிர் அணியினர் இரவு நேரங்களில் யார் வீடு திறந்திருக்கிறது என்று நோட்ட மிட்டு, அவர்கள் வீட்டில் நுழைய காத்திருக்கின்றனர். எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்போது திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் சாதாரண ஊராட்சி மன்றத் தலைவர். அவருக்கும் வாய்ப்பளித்து மக்களவை உறுப்பினராக உயர்த்த கட்சித் தலைவர் ஸ்டாலின் உழைத்து வருகிறார். இதை வேறெங்கும் காண முடியாது. எனவே இது சமூக நீதிக்கும், மனுநீதிக்கும் இடையேயான போராட்டமாக கருதி களம்காண வேண்டும்.
பழனிசாமி வகையறாக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியதை சாதனையாக கூறுகின்றனர். அவர்கள் அரசாணை பிறப்பித்ததோடு சரி. அதன் பின் மாவட்டத்தை முழுமைப்படுத்தியது திராவிட மாடல் அரசு. சர்க்கரை என பேப்பரில் எழுதி வைத்து நாக்கில் தடவினால் இனிக்குமா? அது போன்று தான் அவர்கள் செயல். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வளர்ச்ச்சிப் பாதை நோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். கல்வராயன் மலை வாழ் மக்களின் 50 ஆண்டுகால பிரச்சினைக்கு திராவிட மாடல் அரசு தீர்வு கண்டு 4 ஆயிரம் பேருக்கு பட்டா உரிமைச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.