டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று சிறையில் இருந்தபடி சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்குக் கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. இதனை நிராகரித்து வந்த கெஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான பிறகும் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், “அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறை காவலில் இருந்தாலும், டெல்லி மக்களின் நிலை குறித்து கவலைப்படுகிறார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், டெல்லி மக்கள் அதனால் பாதிக்கப்படக்கூடாது என நினைக்கிறார். மேலும், டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி முதல்வர் எனக்கு உத்தரவிட்டுள்ளார். டெல்லி மொஹல்லா மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் கையிருப்பு வைப்பதை உறுதிசெய்யவும், டெல்லி மக்களின் நல்வாழ்விற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது ஒரே கவலை என்னவென்றால், அவர் இல்லாத நேரத்திலும் எந்த சேவையும் பாதிக்கப்படாது என்பதுதான். நாங்கள் அவருடைய தொண்டர்கள். 24 மணி நேரமும் வேலை செய்வோம், ஆனால் டெல்லிவாசிகள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்” என்றார்.
முன்னதாக கெஜ்ரிவாலின் முதல் உத்தரவு பற்றி டெல்லி நீர் வளத் துறை அமைச்சர் அதிஷி, “டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் தன்னைபற்றி கவலைப்படவில்லை. டெல்லி மக்கள் குறித்தும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் மட்டுமே அவர் கவலைப்படுகிறார். சிறையில் இருந்தபடியே அவர் தனது முதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், டெல்லியில் குடிநீர், கழிவுநீர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். துணைநிலை ஆளுநரின் ஆதரவை கோர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் பிரதமர் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் மகா பேரணி என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க் கிழமை) பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் டெல்லி காவல் ஆணையர் அளித்த ஊடகப் பேட்டியில், “பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி பேரணியோ, முற்றுகைப் போராட்டமோ நடத்த நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. பிரதமர் இல்லம் அமைந்துள்ள பகுதியிலும் மற்ற பகுதிகளிலும் போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
காவல்துறை துணை ஆணையர் தேவேஷ் குமார் மஹ்லா கூறுகையில், “ ஆம் ஆத்மியின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பிரதமர் இல்லம் மற்றும் படேல் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நாங்கள் போதுமான அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். எந்த ஆர்ப்பாட்டமும் அனுமதிக்கப்படாது” என்றார்.