வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தனி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டிடுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடும் நிலையில் வேட்புமனு தாக்கலும் செய்துள்ளார். மேலும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்தார். மேலும் டிவி சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்படி கிருஷ்ணசாமி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செ்தார். ஆனால் தேர்தல் ஆணையம் டிவி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டது. இதனால் கிருஷ்ணசாமி டிவி சின்னத்துக்கு பதில் புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது கிருஷ்ணசாமியின் மனம் மாறிவிட்டது. அதாவது தனிச்சின்னத்தில் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி வாய்ப்பு குறையலாம். இதனால் வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதே சிறப்பானது என அவர் நினைத்தார். இரட்டை இலை சின்னம் என்பது மக்களுக்கு நன்கு பரீட்சயமான சின்னம். இதனால் இரட்டை இலையில் போட்டியிட உள்ளதாக கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இந்த தென்காசி தொகுதி ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஜான் பாண்டியன் தான் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அரசியலில் ஜான் பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில் இருவரும் தென்காசியில் வெற்றிக்கு மல்லுக்கட்ட உள்ளனர்.
இவர்கள் தவிர இந்த தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணனும் போட்டியிடுகின்றனர். ராணி ஸ்ரீகுமார் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் நிலையில் இசை மதிவாணன் மைக் சின்னத்தில் தேர்தலை சந்திக்க உள்ளார். இவர்கள் தவிர சுயேச்சைகளும் களமிறங்கி உள்ளதால் தென்காசி லோக்சபா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.