மோடியிடம் சரணாகதி, வெளியில் வீரவசனம் என்பதே தி.மு.க.,வின் கொள்கை. பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் அது குறித்து விமர்சிப்பது தவறானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க தேர்தல் பணிமனையை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்குள் இருந்தால் விமர்சிக்க மாட்டோம். கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் தவறு இருந்தால் விமர்சிப்போம். கூட்டணிக்குள் இருக்கும்போதே உள்ளடி வேலையில் ஈடுபட மாட்டோம். கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம். பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் அது குறித்து விமர்சிப்பது தவறானது. தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்கள் இருந்தால் அதை கண்டிப்பாக விமர்சிப்போம்.
மோடியிடம் நேரில் சரணாகதி, வெளியில் வீரவசனம் என்பதே தி.மு.க.,வின் கொள்கை. பிரதமர் மோடிக்கு கருப்புக்குடை பிடிக்காமல் வெள்ளைக்குடையை பிடிக்கின்றனர். திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமரை தி.மு.க.,வினர் அழைக்கின்றனர். பின்னர் விமர்சிக்கின்றனர். ஓபிஎஸ் பெயரில் 5 பேர் மனுதாக்கல் செய்துள்ளது குறித்து நான் எப்படி கருத்துக்கூற முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமேனாலும் போட்டியிடலாம். மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.