தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதை ஊழலாக கருத முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தென்சென்னை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கோடம்பாக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தேர்தல் பத்திரங்கள் குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. மீது மட்டும் குற்றம் சுமத்துகிறார்கள். எதுவுவே கணக்கில் இருந்தால் அதை ஊழலில் கொண்டு வர முடியாது. தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளது. அதை ஊழலாக கருத முடியாது” என்று தெரிவித்தார்.

மதிமுக எம்பி கணேசமூர்த்தி மரணம் தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

கணேசமூர்த்தி இறந்தது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் என்றுதான் பிரதமர் மோடி கூறி வருகிறார். நன்றாகப் பணியாற்றிய மதிமுக எம்பியை வாரிசு அரசியல் படுகொலை செய்திருக்கிறது. குடும்ப ஆசை, வாரிசு ஆசைதான் இந்த மரணத்துக்கு காரணம். அனுபவம் வாய்ந்த எம்பியை மகனுக்கு சீட் கொடுத்ததன் மூலம் வைகோ படுகொலை செய்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம். உலகத்தில் எங்கேயும் நடக்காதது. ஒரு எம்பி தற்கொலை செய்வது என்பது தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. மிகுந்த மனவேதனையாக இருக்கிறது. இதுதான் வாரிசு அரசியலின் அபாயகரம். முதலில் திராவிட கட்சிகளில் வாரிசு அரசியல் ஒழியட்டும். அதன் பின்னர் பாஜகவின் ஜனநாயகத்தை பற்றி அந்த கட்சிகள் விமர்சிக்கட்டும். இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.