பேரிடர் காலங்களில் நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு நமது வாக்கை செலுத்தக் கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யாவுக்கு ஆதரவுக் கோரி, ஆலங்குளத்திற்கு வந்த சீமான், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திறந்த வேனில் நின்று மக்கள் மத்தியில் பேசியதாவது:-
இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு.
இந்தியாவிற்கென தனி கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும். அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.
பேரிடர் காலங்களில், ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு நமது வாக்கை செலுத்தக் கூடாது. இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன் தம்பி, சித்தப்பா,பெரியப்பா, மாமன், என வேறுபாடு பார்க்கக் கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன் தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக என்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான். காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.