பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படுகின்ற ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன்: கமல்ஹாசன்!

ஈரோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து இன்று மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர், பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படுகின்ற ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன் என்று பேசினார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் இன்று திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசியதாவது:-

நாம் கொடுக்கிற வரியில், ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது. ஆனால் இங்க நம்ம ஊருக்கு வேலை தேடி வர்ராங்களே அவர்களுடைய ஊரில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்களுக்கு 7 ரூபாயை மத்திய அரசு திருப்பி கொடுக்கிறது. ஆனால் அங்கே இருந்து தான் தமிழகத்திற்கு கூலி வேலைக்கு வருகிறார்கள். அப்போ இந்த பணம் என்னாச்சு? இதனை நாம் கேட்க வேண்டும். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது ஆண்டாண்டு காலமாக நம்மை பற்றி மற்றவர்கள் சொல்லும் புகழ். நாம் ஏற்றுக்கொண்ட ஒரு பொறுப்பு. கடமை. இங்கே வரும் போது பிரதமர் மோடி மழலை தமிழில் ஒரு இரண்டு மூன்று தமிழ் வார்த்தைகளில் பேசுவார். வரப்பு உயர நீர் உயரும்.. இது எல்லாம் நம்மளுக்கு தெரியும். ஆனால் நாம இப்படி கேட்டதே இல்லை. அட! ஒளவையாரே இன்னொரு மொழியில் இப்படி பேசியிருக்கிறார் போல சந்தேகப்படும் வகையில் மோடி பேசுகிறார். இங்கே வந்து இப்படி 2 வார்த்தை தமிழில் பேசிவிட்டால் தமிழர்கள் நம்பி ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்.

நான் வந்திருப்பது பதவிக்காக இல்லை. என் கட்சிக்காரர்களின் கவலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு நான் இங்கே வந்திருக்க காரணம் நாடு காக்கும் உரிமை தமிழனுக்கும் உள்ளது. எப்போதும் உள்ளது. தேசிய நீரோட்டத்தில் கலக்காத திராவிட கூட்டம் இதில் என்று அங்கு பேசிக்கொள்கிறார்கள். நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அங்கே வடநாட்டில் யாராவது கட்டப்பா என்று பெயர் வைத்துள்ளனரா? வ உ சி என்று பெயர் வைத்துள்ளனரா? ஆனால் இங்கே நேரு என்று பெயர் வைத்தவர்கள் கூட இருக்கிறார்கள். தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது எல்லாம் பொய். எங்கள் பெயரை கேட்டாலே தெரியும். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும். பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படுகின்ற ஒருவரிடம் வீரத்தை பற்றி பேசி என்ன பயன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.