மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் நாளை பரப்புரையைத் தொடங்க உள்ளார்
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம் பெற்றுள்ளது. ஆனால் லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் ராஜ்யசபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சிக்கு 1 இடம் வழங்குவதற்கு திமுக- மநீம இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக கமல்ஹாசன் கூறுகையில், இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. நாங்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு சேர்ந்திருக்கிறேன். மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதன்படி இன்று முதல் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.
ஈரோடு லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக மநீம வெளியிட்ட அறிவிப்பில், திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் பிரகாஷ்-க்கு அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் கமல்ஹாசன் ஈரோடு மற்றும் குமாரபாளையத்திற்கு (வெப்படை) வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! என பதிவிட்டுள்ளார்.