மோடி மீண்டும் பிரதமர் ஆகபோவது குழந்தைக்கு கூட தெரியும்: வானதி சீனிவாசன்!

’மோடி மீண்டும் பிரதமர் ஆகபோவது குழந்தைக்கு கூட தெரியும்’ என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தர். அப்போது பேசிய அவர், கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். 2014 முதல் 2019 வரை அவர் இந்த தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்கள் என்பது எந்த எம்.பிக்களும் தங்கள் தொகுதிகளுக்கு கொண்டு வந்தது இல்லை. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை இந்த தொகுதியில் நிறைவேற்றி மக்களின் இன்பதுன்பங்களில் பங்கேற்று கன்னியாகுமரி மக்களுக்கு வளர்ச்சி என்றால் என்ன என்று காட்டியவர். ஆனால் 2019 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் வென்ற நாடாளுன்ற உறுப்பினர் மூலம் கன்னியாகுமரிக்கு கிடைத்த நன்மை என்ன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் வென்ற எம்.பிக்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் 400 எம்பிக்களை பெரும் சூழல் பாஜக கூட்டணிக்கு உள்ளது. பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிதான் வருவார் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும் என்பதால், கன்னியாகுமரி மக்கள் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

கேள்வி:- வருமானவரித்துறை மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளனரே?

பதில்:- வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை சட்டரீதியாக கிடைக்கும் ஆதாரங்களை கொண்டு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அவர்கள் தவறாக செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்கள் உள்ளது. நீதிமன்றங்கள் தங்கள் கடமையை சுதந்திரமாக எடுக்கும் நாட்டில் தப்பு செய்த யாராக இருந்தாலும் நீதியின் முன் பதில் சொல்லட்டும்.

கேள்வி:- பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதே?

பதில்:- ஒவ்வொரு கட்சிக்கும் சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் விதிகளை வைத்துள்ளனர். ஒரு சில அரசியல் கட்சிகள் தூங்கிவிட்டு பாஜக மீது பாய்கிறார்கள். தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே சின்னம் கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றம்தான் செல்ல வேண்டும் பாஜக எதுவும் செய்ய முடியாது. தேர்தல் கள நிலவரம் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆதரவாக மாறி வருகிறது. கோவையில் கூட்டணி இல்லை என்றாலும் முழுக்க முழுக்க பாஜக கூட்டணிக்கு ஆதரவாக மாறி வருகிறது. வாக்களிக்கும் நாளில் மௌனமாக மாற்றம் நிகழும் என நாங்கள் நம்புகிறோம்.

கேள்வி:- தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளாரே?

பதில்:- நிர்மலா சீதாராமன் தனது நிலையை கட்சியிடம் கூறி உள்ளார். நிர்மலா சீதாராமன் கூறிய ஒரு பகுதியை மட்டும் விட்டுவிட்டு மற்றொரு பகுதியை நாம் விட்டுவிட்டுகிறோம். பணம் இருந்தால் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை இல்லை. அவர் தேர்தல் அரசியலுக்கு இன்னும் வராததால் அவர் மனதில் உள்ள தயக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் எந்த எந்த அளவுக்கு எளிமையாக இருந்துள்ளார் என்பதுதான் இதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி.

கேள்வி:- தேர்தல் பத்திரங்கள்தான் உலகின் மிகப்பெரிய ஊழல் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவ பிரகாலா பிரபாகர் குற்றம்சாட்டி உள்ளாரே?

பதில்:- நிதி அமைச்சரின் கணவர் என்ற வார்த்தையே தவறானது. அவருடைய கருத்தை ஏன் நிதி அமைச்சர் உடன் ஒப்பீடு செய்கிறீர்கள். அவர் சொல்லும் கருத்துக்களுக்கு பலமுறை எங்கள் அமைச்சர்கள் பதில் சொல்லிவிட்டனர். தேர்தல் பத்திரங்களை பல்வேறு அரசியல் கட்சிகளும் நன்கொடை வாங்கி உள்ளனர். அப்படியே ஊழல் நடந்துள்ளதால் அவர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இணைத்துக் கொண்டு ஆதாரத்தை காட்ட வேண்டும்.

கேள்வி:- மோடி மீண்டும் பிரதமர் ஆக கூடாது என சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளாரே?

பதில்:- மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு நான் பதில் சொல்ல முடியாது. அவர் பாஜகவில் உள்ளாரா என்ற கேள்விக்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என வானதி சீனிவாசன் கூறினார்.