கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்த்து முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரசுடன் இந்தியா கூட்டணி எனும் பெயரில் இணைந்துள்ளன. இந்த கூட்டணி தலைவர்களுக்கு மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றன. சமீபத்தில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளும் இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்தன.

இந்நிலையில், தற்போது கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் இந்தியா கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.200 கோடி வரி பாக்கி என்று கூறி காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி வங்கி கணக்கு முடக்குவது கட்சியை முடக்குவதற்கு சமம் என காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறுமதிப்பீடு செய்யும் வேலைகளை வருமான வரித்துறை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டது. இதன் பின்னர் சில மணி நேரங்களில் ரூ.1823 வரி பாக்கி இருப்பதாக காங்கிரஸுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது, கடந்த 1993-1994 முதல் 2020ம் ஆண்டு வரை வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்த தொகையை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளதாக கூறியுள்ளது.