கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்த காங்கிரஸின் செயல் ஒற்றுமைக்கு எதிரானது: எல்.முருகன்

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சிக்கு மத்திய இணையமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எல்.முருகன் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தின் சிறப்புமிக்க ராமநாதபுரம் சீமை மறவர் நாட்டுசேதுபதி மன்னர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதி 1605-1972-ம் ஆண்டு வரையிலான அனைத்து பதிவேடுகளிலும் அப்பகுதி இந்தியாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்துள்ளது. நாடு விடுதலை அடைந்து 1948-ல் ராயத்வாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகு பதிப்பிக்கப்பட்ட நில ஆவணங்களின்படி மெட்ராஸ் மாகாணம் சர்வே எண்.1250-ல் கச்சத் தீவு இடம்பெற்றுள்ளது.

இப்படி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு பாத்தியப்பட்ட கச்சத் தீவை தான் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு வாரிக் கொடுத்தது. இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி ஓர் மாநிலத்தை மாற்றி அமைக்க கூட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி சட்டம் இயற்ற வேண்டும். ஆனால் இதை எதையும் மதிக்காமல் தமிழகத்தின் மாநில அரசிடம் கூட கலந்து பேசாமல் 1974 மற்றும் 1976-ம்ஆண்டு ஒப்பந்தங்கள் படி கச்சத்தீவு மீதான இந்தியாவின் உரிமையை தன்னிச்சையாக இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் கட்சி. தமிழகத்தை அப்போது ஆண்டு கொண்டிருந்த திமுக அரசு இதனை வெறும் பேச்சளவில் கண்டித்து தன் பொறுப்பில் இருந்து நழுவிக் கொண்டது.

1974-ல் நாடாளுமன்றத்தில் பாஜவின் முக்கிய தலைவர் வாஜ்பாய், கச்சத் தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு இந்தியாவுக்கு துரோகம் இழைத்துள்ளதை தகுந்த ஆதாரத்தை சுட்டி காட்டி பேசியுள்ளார். ராமாயண காவியத்தின் படி ராமரும் வாலியும் மல்யுத்தம் செய்த இடம் கச்சத்தீவு என்றும், அதனால் ஒரு காலத்தில் வாலித் தீவு என அழைக்கப்பட்டதையும் வாஜ்பாய் உரையில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

எக்காலமும் இந்தியாவின் உரிமை மற்றும் தமிழர்களின் நலன் மீது பாஜக அக்கறையுடன் இருக்கும் என்பதற்கு மேற்கண்ட உரை ஒரு உன்னத சாட்சி. எனவே இத்தகைய பெருமைமிகு தீவை தமிழர்களின் பூர்வீக பூமியை தனது அரசியல் ஆதாயத்துக்காக இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸ் அரசு இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான தீய சக்தியாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.