மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் அமைந்துள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை மூட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் சமீபத்தில் திறக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில், கலைஞர் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை குறித்த ஒலி, ஒளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் புகார் மனு அளித்தார். அதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், விதிகளுக்கு மாறாக, கருணாநிதி நினைவிடத்தில் அவரது வாழ்க்கை வரலாறு காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தை மூடவேண்டும். கருணாநிதி நினைவிடத்தில் திமுகவின் சின்னத்தை போன்ற ஒளி அமைப்பு உள்ளது. அதனையும் நிறுத்த வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.