மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது: மல்லிகார்ஜுன கார்கே!

மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, திருச்சி சிவா, திருமாவளவன் உள்பட பலர் பங்கேற்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனாவும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

நாடு, ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல் இது. நாம் ஒன்றிணைந்தால்தான் பா.ஜ.க.வை எதிர்கொள்ள முடியும். நமக்குள் நாமே மோதிக்கொண்டிருந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது.
இந்த தேர்தல் களத்தில் சமநிலை போட்டியில்லை. பிரதமர் மோடி மைதானத்தில் பள்ளம் தோண்டிவைத்துவிட்டு எதிர்க்கட்சிகளை அதில் கிரிக்கெட் விளையாடும்படி கூறுகிறார்.

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.வும் விஷத்தை போன்றது. அதை ருசிக்க வேண்டாம். அவர்கள் நாட்டை அழித்துவிட்டனர். அவர்கள் நாட்டை மேலும் அழிக்க அனுமதிக்கக்கூடாது. மோடியும் அவரது சித்தாந்தமும் அகற்றப்படாதவரை நாடு வளர்ச்சியடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேசியதாவது:-

சிறையில் இருந்து எனது கணவர் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அந்தச் செய்தியைப் படிக்கும் முன், உங்களிடம் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, என் கணவரைச் சிறையில் அடைத்தார். பிரதமர் மோடி செய்தது சரியா? கெஜ்ரிவால் உண்மையான தேசபக்தர், நேர்மையானவர் என்று நீங்கள் நம்புகிறீர்கள் தானே? கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார், அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் கூறுகிறார்கள், அவர் ராஜினாமா செய்ய வேண்டுமா? உங்கள் கெஜ்ரிவால் சிங்கம், அவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது,” என்றார்.

தொடர்ந்து கெஜ்ரிவால் சிறையில் இருந்து அனுப்பிய மெசேஜை அவர் வாசித்துக் காட்டினார். அதில் கெஜ்ரிவால், “நான் இன்று வாக்கு கேட்க இந்த செய்தியை அனுப்பவில்லை. புதிய இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியர்களை அழைக்கிறேன். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட மகத்தான தேசம் தான் இந்தியா. சிறைக்குள் இருந்தே பாரத அன்னையை நினைத்து வேதனைப்படுகிறேன். வாருங்கள். புதிய இந்தியாவை உருவாக்குங்கள். எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியாவுக்கு “ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், நாங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவோம். இந்தியக் கூட்டணியின் சார்பில் ஆறு உத்தரவாதங்களை முன்வைக்கிறேன். முதலில் நாடு முழுவதும் மின்வெட்டு இருக்காது. இரண்டாவதாக ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம். மூன்றாவதாக ஒவ்வொரு கிராமத்திலும் அரசுப் பள்ளிகள் கட்டுவோம். நான்காவதாக. ஒவ்வொரு கிராமத்திலும் மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்குவோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையை உருவாக்குவோம். அங்கே அனைவருக்கும் இலவச சிகிச்சை கிடைக்கும். ஐந்தாவது, விவசாயிகளுக்குப் பயிர்களுக்குச் சரியான விலை வழங்கப்படும். ஆறாவது, டெல்லி மக்கள் 75 ஆண்டுகளாக அநீதியை எதிர்கொண்டுள்ளனர். டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்போம். இந்த ஆறு உத்தரவாதங்களையும் ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். இந்த உத்தரவாதங்களுக்கான நிதி எங்கிருந்து வரும் என்று சந்தேகம் வரலாம். அதற்கான பிளானும் என்னிடம் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.