கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (திங்கள்கிழமை) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது தொடர்பாக வெளியாகும் புதிய தகவல்கள் திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களைப் பேண திமுக எதுவுமே செய்யவில்லை என்பது புலப்படுகிறது. காங்கிரஸும், திமுகவும் குடும்ப அமைப்புகள். அவர்களின் மகன்கள், மகள்கள் முன்னேற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை. வேறு யாரைப் பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அக்கறையின்மை தான் ஏழை மீனவர்கள், குறிப்பாக மீனவப் பெண்களின் நலன்களைப் பெரிதும் பாதித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட ஆவணங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அதில், “இந்தச்சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் தரப்போவதில்லை. கச்சத்தீவு உரிமையை விட்டுக்கொடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரம் மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை விரும்பவில்லை” என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியது இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி, “யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் தாரை வார்த்திருப்பது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட புதிய தகவல்களின் மூலம் அம்பலமாகி உள்ளது. இந்த புதிய தகவல்கள் ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. காங்கிரஸை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதை மக்களின் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. நாட்டின் நலன்களை அந்த கட்சி முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது” என எக்ஸ் தளத்தில் நேற்று பதிவு செய்திருந்தார்.